விழுந்தோம் இனி எழுவோம்.


கிரிஷாசன்
12, December 2010
Views 535

விழிகள் நீரைவழியச் செய்த விதியே ஓடாதே - பல
மொழிகளுண்டு முடிவும்சொல்லு பதிலே கூறாயோ
அழியும் ஈழக்கதைகள் யாவும் ஆக்கம் உன்னாலே -ஓர்
வழியைச் சொல்லி, நழுவிச் செல்லு! விதியே கூறாயோ!

தமிழர்கொல்ல எவனும் சொன்னால் தகுமோ நீதானே -இவர்
உமிழக்குருதி உயிரைக் கொன்று ஓடிப் போனாயோ
வழமைக்கான விதிகள் போருக் கிலையே எதனாலே - பெரும்
அழிவைத்தந்தாய் அவருக்கேனோ அடிமை யானாயே

திமிரைக்கண்ட சிங்கத்தலையோன் செருக்கில் நின்றானே - நல்
அமிர்தப் பெண்ணாள் தமிழர்க் கன்னை துயரைச் செய்தானே
நிமிரத்தானே எண்ணிக்கொண்டோம் நிகழப்பெரிதான- ஓர்
சமரைத்தந்து தமிழன் தலையைச் சரியச் செய்தாயே

எவரைக் கொன்று இன்பம் கண்டாய் இளையப் பருவத்தே - வெறும்
குமரைச் சின்னக் குழந்தை, பெண்கள், கிழவர் இவைதாமே
தவறைச்செய்தாய் தமிழர்க்கென்று காவல் கொண்டோரை -நீ
மறையச்செய்ய மனமேகொண்டாய் மதுகொள் வெறியோனே

உயிரைகொல்ல ஒருநாள் நீயும் வருந்திக்கொள்வாயே -இவை
பயிரைவெட்டி களையைவிட்ட பாடாய் போனாச்சே
தயிரைக் கொட்டிப் பாலைகாண தானும் முயலாதே - எம்
தலையைவெட்டி போட்டாய் பின்னர் உயிரைத்தேடாதே

நிலையைப்பாரு வலையைபோட்டுமீனைகொண்டானோ - அவன்
குவளைக்குள்ளே போட்டேஅன்பில் கொண்டேன் என்பானே
உலையில்போட்டு குளிரைபோக்க உதவும் என்பானோ --பின்னே
உண்ணும் போது உண்மை கண்டு ஏதும் பயனாமோ?

மனுவுக் கொருநாள் மகனைக்கொல்ல விதியே சொன்னாயே தமிழ்
மகளோ டொருநாள் மனதில் நின்று மதுரை எரித்தாயே!
அனுமன் வாலில்தீயை வைத்து இலங்கை எரித்தாயே இந்த
அழகுத்தமிழர் ஊயிரைக் கொல்ல ஆசைஎதனாலே?

எழுதிக்கொள்ளு இடரைத்தாண்டி எழுவோம் முன்னாலே - சாவைத்
தழுவிக்கொண்ட வீரர் இன்னும் தரணிக் குரம்தானே
புழுதி குள்ளே விதைகள் மழையைக் கண்டே எழுமாமே நாம்
விழுவோம் எழுவோம் விழுந்தோ மிப்போஎழுமோர் முறைதானே!

தேசத்தின் குரல் அண்ணன் நினைவாக


கிரிஷாசன்
16, December 2010
Views 78

கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து
 கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி
இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை
  எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை
 
எதானால் இவரை அழைத்தாய் எங்கள்
 இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை
பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை
பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய்
 
மனதில் உரமும் செழிக்கும்வேளை
 மரணம்தந்தே மயங்கச்செய்தாய்
கனவில்மட்டும் நிம்மதி என்று
 காலமெல்லாம் கலங்கச் செய்தாய்
 
உரையைக்கேட்க இதயம் மகிழும்
  உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும்
வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து
  வழியில் செல்ல இருளைத் தந்தாய்
 
இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும்
 என்றா இவரை கொண்டாய் சதியை
பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய்
 பிழையை செய்தாய்  பேசற்கரிய
 
தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம்
 தரணிகின்றிச் செய்தாய் எங்கள்
அமிழ்தாம் தேசக்குரலின் தலைவன்
 அழியா தெங்கள் நினவில் நிலைப்பார்
 
வருமாம் ஈழம் வந்தேதீரும்
வழியும் தோன்றும், வளரும் ஜோதி
பெருமா ஒளியாய் விரியும், ஈழம்
பிறந்தோர் நாளில் பெருமைகொள்ளும்
 
உயிரில் உணர்வில் ஊறிக்கொண்டார்
 உலகில் எவரும் பாசத்தோடு
அருகில் சென்று அன்பாய் பேசும்
 அண்ணன் தேசக்குரலோன் எங்கள்
 
தமிழீழத்தின் கொள்கைதன்னை
 தாயகம் தேசியம் தன்னாட்சி யென்
றழகாய் வகுத்து அளித்தார் அவரை
 அகிலம் உள்ளோர் வரையும் மறவோம்

Submit Poem

உங்கள் கவிதையை அனுப்பும் படிவம்
Name:
eMail:
Poem heading:
Poem:

About this blog

w

Popular Posts

தரவிறக்கம் செய்ய

Blog Archive